காலியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவருக்கு அவருடைய முற்பிறப்பு ஞாபகத்தில் உள்ளது.சிறுவனின் பெயர் மஞ்சுள.
கடந்த பிறப்பில் உடுகம கிராமத்தில் உதய கெலிம் என்கிற பெயரில் வாழ்ந்து இருக்கின்றார் என்று கூறுகின்றார் சிறுவன்.
உதய கெலிம் குறித்து சிறுவன் கூறுகின்ற தகவல்கள் அனைத்தும் நூறு சதவீதம் சரியாக உள்ளன.
உதய கெலிம் என்பவர் மீன் வியாபாரி. செல்வந்தர். வாகனங்கள் பலவற்றை வைத்து இருந்திருக்கின்றார். சுமார் 11 வருடங்களுக்கு முன் வாகன விபத்து ஒன்றில் 35 வயதில் இறந்து போனார்.
சிறுவனின் கிராமம் உதய கெலிமின் கிராமத்துக்கு அருகில்தான் உள்ளது.
சிறுவன் முற்பிறப்பை நினைவு கூர்ந்து சம்பவங்களை சொல்லி வந்து இருக்கின்றார்.

பத்து மாத குழந்தையாக இருந்தபோது இச்சிறுவனுக்கு விளையாட்டு கார்கள் மீது அதிக
நாட்டம் காணப்பட்டு இருக்கின்றது.
தனிமையில் இருக்கின்றபோது கடந்த பிறப்பைப் பற்றி சுயம் பேசி வந்திருக்கின்றது குழந்தை.
சிறிய வயது தொட்டு உடுகம கிராமத்தை பற்றியும் சுது நோனா என்பவரை பற்றியும் தரிந்து, ஹிமாலி என்பவர்கள் பற்றியும் சிறுவன் சொல்லி வந்திருக்கின்றார். கொழும்பு வாழ்க்கை பற்றி சொல்லி இருக்கின்றார்.
உதய கெலிம் போல புகைப் பிடித்து நடித்துக் காண்பித்து இருக்கின்றார். இவரால் நன்றாக பாட முடிகின்றது. வாகன உதிரிப் பாகங்களை மிக இலேசாக அடையாளம் காண்கின்றார்.
ஒரு முறை சிறுவனை பெற்றோர் காலி வெளிச்ச வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆயினும் ஏற்கனவே இவ்வெளிச்ச வீட்டுக்கு வந்து பரிச்சயமானவர் போல நடந்து கொண்டார். இவர் இவ்வெளிச்ச வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அக்குவேறு ஆணி வேறாக அறிந்து வைத்திருக்கின்றார்.
உதய கெலிம் குறித்து அறிய முற்பட்டனர் சிறுவனின் பெற்றோர். பொலிஸில் சென்று விசாரித்தனர். சிறுவன் சொல்லி வந்தபடி 2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி வாகன விபத்து ஒன்று இடம்பெற்று உதய கெலிம் என்பவர் இறந்துதான் இருக்கின்றார் என்பதை பொலிஸ் ஆவணங்கள் உறுதிப்படுத்தின. உதய கெலிமினின் வீட்டை சிறுவனின் பெற்றோர் கண்டுபிடித்தனர். உதய கெலிமின் வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு சிறுவன் குறித்து தகவல் வழங்கப்பட்டது.
உதய கெலிமின் வீட்டுக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து வந்தனர். ஏற்கனவே வீட்டுக்கு வந்து பரிச்சயமானவர் போல நடந்து கொண்டார். கால இடைவெளியில் வீட்டில் ஏற்பட்டு இருக்கக் கூடிய மாற்றங்களை அப்படியே சொன்னார். உதய கெலிமினின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மிக துல்லியமாக அடையாளம் காட்டினார். கடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

உதய கெலிமின் மறுபிறப்புத்தான் இச்சிறுவன் என்பதை உதய கெலிமின் உறவினர்கள், நண்பர்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.
ஆனால் எடுத்த எடுப்பில் எல்லோரையும் போல ஏற்றுக் கொள்ள கெலிமின் மனைவியால் முடியாமல் போய் விட்டது. இதில் ஏதோ சுத்துமாத்து உள்ளது என நம்பினார்.
இவரின் பெயர் ஜமுனா. வயது 43. இவர் அம்பலாங்கொடவில் வாழ்ந்து வருகின்றார். இதனால் உடுமக பயணத்தின்போது சிறுவனால் இவரை சந்திக்க முடியவில்லை.
உண்மையில் கணவனின் மறுபிறப்புத்தானா? என்று அறிய இரு பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோருடன் சிறுவனின் வீட்டுக்கு நேரில் போனார். இந்நிலையில் இவர்கள் வானில் வந்து இறங்கிய உடனேயே சிறுவன் அடையாளம் கண்டு கொண்டார். ஜமுனா குடும்ப அல்பம் ஒன்றை கூடவே எடுத்து சென்று இருந்தார்.
முற்பிறப்பு மனைவி மற்றும் குழந்தைகளை மிகுந்த கனிவோடு உச்சி முதல் உள்ளம் கால் வரை பார்த்தார் சிறுவன். இப்பார்வையின் அன்பின் ஆழம் வெளிப்பட்டு நின்றது.
அல்பத்தில் இருந்த புகைப்படங்களை காட்டி விளக்கங்கள் கேட்டார் ஜமுனா. சிறுவன் மிகவும் அச்சொட்டாகவே பதில்கள் சொன்னார். அத்துடன் கெலிமுக்கும், ஜமுனாவுக்கும் மாத்திரம் தெரிந்து இருக்கக் கூடிய இரகசியங்களை பகிர்ந்து கொண்டார்.
இவருடன் பல விடயங்களையும் உரையாடிய கெலிமின் விதவை மனைவி ஜமுனா கணவன்தான் மறுபிறப்பு எடுத்து வந்து உள்ளார் என்கிற முடிவுக்கு வந்து விட்டார். கண்ணீர் விட்டு அழுதார்.
சிறுவனை மடியில் இருத்தி இரு பிள்ளைகள் சகிதமாக புகைப்படங்கள் பிடித்துக் கொண்டார் கெலிமின் விதவை மனைவி.
தொடர்புடைய செய்தி இங்கே
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்












கருத்துரையிடுக