Ad

Photobucket
 
திங்கள், 8 அக்டோபர், 2012

சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்: இலங்கை பரிதாபம்! (படங்கள்)

டி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் 36 ஓட்டங்களில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் நான்காவது டி20 உலக கிண்ணத் தொடரின் இறுதிச்சுற்றில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சார்லஸ் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், கிறிஸ் கெயில் 16 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் மெண்டிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இதையடுத்து மார்லான் சாமுவேல்சுடன் இணைந்தார் பிராவோ. முதல் 10 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 32 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தனஞ்ஜெயா வீசிய 12வது ஓவரில் பிராவோ சிக்ஸர் அடித்தார். இதுதான் அந்த அணி அடித்த முதல் சிக்ஸர்.

மலிங்கா வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட சாமுவேல்ஸ், 3 சிக்ஸர்களை விளாசினார். இதனால் அந்த ஓவரில் 21 ஓட்டங்கள் கிடைத்தன. அந்த அணி 73 ஓட்டங்களை எட்டியபோது பிராவோ ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 1 சிக்ஸருடன் 19 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து போலார்ட் களம்புகுந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாமுவேல்ஸ், மெண்டிஸ் வீசிய 15-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 46 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனிடையே போலார்ட்(2) , ஆன்ட்ரே ரஸ்ஸல்(0) ஆகியோர் ஆட்டமிழக்க, அணித்தலைவர் டேரன் சமி களம்புகுந்தார்.

மலிங்கா வீசிய 17-வது ஓவரை எதிர்கொண்ட சாமுவேல்ஸ், 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். தனஞ்ஜெயா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை சாமுவேல்ஸ் சிக்ஸருக்கு தூக்கினார்.
ஆனால் அது எல்லையில் நின்ற மெண்டிஸ் கையில் தஞ்சம் புகுந்தது. அவர் 56 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், மலிங்கா ஓவரில் அடிக்கப்பட்டதாகும்.

கடைசி ஓவரில் சமி 2 பவுண்டரிகளை விரட்ட அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. டேரன் சமி 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்களும், ராம்தின் 4 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மலிங்கா 4 ஓவர்களில் 54 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான தில்ஷான் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜெயவர்த்தனாவுடன் இணைந்தார் சங்ககாரா.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 42 ஓட்டங்கள் சேர்த்தது. 26 பந்துகளைச் சந்தித்த சங்ககாரா 22 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த மேத்யூஸ் ஒரு ஓட்டத்தில் வெளியேற, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது.
மறுமுனையில் நிதானமாக ஆடிய அணித்தலைவர் ஜெயவர்த்தனா 36 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரெரா ஆகியோர் தலா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

திரிமன்னே 4 ஓட்டங்களில் வெளியேற 14.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 69  ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது இலங்கை. டைசிக் கட்டத்தில் குலசேகரா 13 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி 3 ஓவர்களில் இலங்கை வெற்றி பெற 41 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அஜந்தா மெண்டிஸ் ஒரு ஓட்டத்திலும், மலிங்கா 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்ஸ் 18.4 ஓவர்களில் 101 ஓட்டங்களில் முடிவுக்கு வந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுனில் நரேன் 3.4 ஓவர்களில் 9 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். சாமுவேல்ஸ் 4 ஓவர்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.







 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.